ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவரது அண்ணன் மகள் தீபாவை ஏற்கவில்லை என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிதாக ஒரு அமைப்பை தொடங்கி நாங்களே உண்மையான அதிமுக என தெரிவித்து வந்தார். 

ஆனால் பன்னீர் செல்வத்திற்கே அதிகபடியான ஆதரவுகள் குவிந்தன. இதைதொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதையடுத்து துணை பொதுச்செயலாளராக டிடிவி பொறுப்பேற்றார். 

ஆனால் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடிக்கும் டிடிவிக்கும் ஏக பொறுத்தம் தான். இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டனி வைக்க சசிகலா குடும்பத்தை நேரடியாக எதிர்த்தார். 

மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள் என கூறிவரும் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக்குக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் வேதா இல்லத்தை கைப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எடப்பாடி.

அதன் ஒரு பகுதியாக வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். 

இதற்கு தீபக் வேதா இல்லத்தின் ஒரிஜினல் பத்திரங்கள் எங்களிடமே உள்ளது எனவும் அந்த வீடு தனக்கும் தன் சகோதரி தீபாவுக்குமே சொந்தம் எனவும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தீபா பேசுகையில் சட்டப்படி வேதா இல்லத்தை மீட்பேன் என தெரிவித்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவரது அண்ணன் மகள் தீபாவை ஏற்கவில்லை எனவும், அனைத்து தரப்பு கோரிக்கைகளை ஏற்றுத்தான் ஜெ. வீடு நினைவிடமாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.