சென்னை, வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் இளமுகிலன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தனர்.

காவல் நிலையத்தில் எதிர் தரப்பினரும் இருந்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில், காவல் ஆய்வாளர் முன்னிலையிலேயே வழக்கறிஞர் இளமுகிலன் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்கறிஞர் இளமுகிலன், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வேளச்சேரி காவல் நிலையத்தில், ஆய்வாளர் முன்னிலையிலேயே, தன்னை தாக்க சிலர் முற்பட்டதாகவும், ஆய்வாளர் அதனை தடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

மேலும், காவல் ஆய்வாளர் அறையில் நடந்த சம்பவம் சிசிடிவியில் பதிவானதாகவும், தாக்க முற்பட்டவர்கள் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் அந்த மனுவில் வழக்கறிஞர் இளமுகிலன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தாதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும், தமிழக டிஜிபி பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவல் நிலையங்களில் சிசிடிவி செயல்படாதது ஏன்? எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதிக்கு அவர் ஒத்தி வைத்தார்.