பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி ரூ.10 லட்சமாக உயர்வு! நேற்று கோரிக்கை! இன்று நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின்!
Journalists Family Assistance Funds Increased: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைத்தனர். இந்நிலையில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்: தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகையாளர் நலன் கருதி, பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழைத்திருத்துபவர்கள் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, குடும்ப உதவி நிதியாக பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: இவ்வளவு பேசுறீங்களே! அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் பட்டியலினத்தவரை துணை முதல்வராக்குங்க! வானதி சீனிவாசன்!
அரசின் கவனமான பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000 என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ7,50,000 என்றும், 10 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.5,00,000 என்றும், 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தி விடுவார்களேயானால் ரூ.2,50,000 என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
இதையும் படிங்க: Chennai Heavy Rain Alert: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை! சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு விடாதாம்!
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினைப் பெற்று இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும். இத்திட்டத்திற்கான செலவினங்கள் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்" இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.