அடித்தது ஜாக்பாட்! 20 ஆயிரம் பேருக்கு வேலை.. மீண்டும் சிக்ஸர் அடித்த முதல்வர் ஸ்டாலின்!!
பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் 2,302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க உள்ளது.
ரூ.2,302 கோடி முதலீட்டில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிப்காட் - உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய உற்பத்தி திட்டம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், உலக அளவில் காலணிகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தைவான் நாட்டின் பெள சென் (Pou Chen) குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடுத்த 12 ஆண்டுகளில் ரூ. 2302 கோடி முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட்-உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில், காலணிகள் உற்பத்திக்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2024-ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்தி, பெருமளவிலான முதலீட்டினை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த பெள சென் கார்ப்பரேஷன் (Pou Chen) காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. பௌ சென் குழுமத்தைச் சேர்ந்த ஹை க்ளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில், 2, 302 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 20, 000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்கவுள்ளது.
இதையும் படிங்க..500 கோடி டீலா! திமுக சொத்து இல்லையா.. திமுகவுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 முதல்வரால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டம் அமைக்கப்படுவதன் மூலமாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே, காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாடு, தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவும்” என்று தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்