சென்னை ஆவடியில் கோழி கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.

சென்னை -ஆவடியை அடுத்த அயப்பாக்கம், அபர்ணா நகரில் வசித்து வருபவர் பேச்சிமுத்து (வயது 35). அதே பகுதியில் கோழிக்கறிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி திருப்பதி (28). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேச்சிமுத்து தொழில் விஷயமாக தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். 

கணவர் வீட்டில் இல்லாததால் திருப்பதி வீட்டைப் பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார். பேச்சிமுத்துவின் வீட்டில் அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர் பாலுசாமி மட்டும் பாதுகாப்புக்காக தங்கியிருந்தார். 

நேற்று முன்தினம் காலையில் பாலுசாமி வீட்டை பூட்டி விட்டு கோழிக்கடைக்கு வேலைக்குச் சென்று விட்டார். அன்றிரவு பாலுசாமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பேச்சிமுத்துவின் வீட்டுப் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து உடனடியாக பேச்சிமுத்துவின் மனைவி திருப்பதிக்கு பாலுசாமி தகவல் கொடுத்தார். 

அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் லாக்கருக்குள் இருந்த 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.