முதலமைச்சர் ஜெயலலிதா சிரித்த முகத்தோடு இருக்கிறார் என டாக்டர்கள் கூறியதாக இசையமைப்பாளா சங்கர் கணேஷ் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையொட்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள், வழிபாட்டு தலங்களில் பரிகாரம், பூஜை, யாகம், அலகு குத்துதல் உள்பட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. விரைவில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் கூறினார்கள். இதை கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவமனையில் விசாரித்தபோது ஜெயலலிதா சிரித்த முகத்தோடு இருப்பதாக தெரிவித்தார்கள். இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதா சீக்கிரம் வந்துவிடுவார். இந்த நற்செய்தியை சொல்லவே நான் வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, அப்பல்லோ மருத்துவமனை அருகே, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடந்தன. அதில், அ.தி.மு.க. மகளிரணி சார்பில் கந்தசஷ்டி பூஜையும், லிங்க பைரவர் பூஜையும் நடைபெற்றது.