Asianet News TamilAsianet News Tamil

ஜெ. தங்கிய அறையை தவிர்த்த ஓ.பி.எஸ் - டெல்லி தமிழ்நாடு இல்லத்திலும் சோகம்

jayalalitha room-not-use-ops
Author
First Published Dec 20, 2016, 10:39 AM IST


டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பு அறையில் தங்காமல், வழக்கமாக தங்கும் அறையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக ஒரு நாள் பயணமாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி சென்றார். அவருடன் தமிழக தலைமை செயலர் ராமமோகன ராவ், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமை செயலரும் நிதித்துறை செயலருமான கே.சண்முகம், திட்டக்குழு செயலர் எஸ்.கிருஷ்ணன், முதல்வரின் செயலர்கள் கே.என்.வெங்கட்ராமன், ராமலிங்கம் ஆகியோரும் சென்றனர்.

jayalalitha room-not-use-ops

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை, ராஜ்யசபா துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார். பின்னர், முதல்வரின் டெல்லிக்கான ஆலோசகர் பவன் ரெய்னா, முதல்வரின் செயலர் சிவதாஸ் மீனா, தமிழக செய்தி- மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், கூடுதல் இயக்குநர் எஸ்.பி.எழிலகன் ஆகியோரும் முதல்வரை வரவேற்றனர்.

jayalalitha room-not-use-ops

இதை தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் சென்ற ஓ.பி.எஸ். அதன் வளாகத்தில் டெல்லியில் திகார் சிறை காவல் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையணி காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

டெல்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் முகப்பு வாயில் வழியாகவும், மாநில ஆளுநர், முதல்வர் ஆகியோர் பின்புற வாயில் வழியாகவும் செல்வது வழக்கம்.

jayalalitha room-not-use-ops

இந்நிலையில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வராக பதவியேற்றுள்ள ஒ.பி.எஸ். முதன் முறையாக டெல்லிக்கு சென்றார். இதையடுத்து "முதல்வர்' என்ற முறையில் அவர் தமிழ்நாடு இல்லத்தின் பின்புற வழியாக அதிகாரிகள் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

அங்கு வாயிலில் இறங்கி, காவலர்களின் அணிவகுப்பு மரியாதை செலுத்தியதும், விருந்தினர் இல்லத்துக்குள் சென்ற அவரை, பின்புறத்தின் வலது பக்கமாக அதிகாரிகள் அழைத்துச் செல்ல முற்பட்டனர். முந்தைய முதல்வர் ஜெயலலிதா அந்த வழியாகத்தான் மேல் தளத்தில் உள்ள அவரது அறைக்கு செல்வது வழக்கம்.

ஆனலும், அந்த வழியாக செல்லாமல், "எனக்கு முதல்வர் அறை வேண்டாம். வழக்கமாக நான் தங்கும் அறைக்கே செல்கிறேன்' என்று கூறி பன்னீர்செல்வம் நடக்க தொடங்கினார்.

இதையடுத்து அவர் அறை எண் 106 சென்று தங்கினார். மற்ற அறைகளில் முதல்வரின் ஆலோசகர்கள், தலைமைச் செயலர், துறைச் செயலர்கள் தங்கினர்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு தமிழ்நாடு இல்ல வளாகத்திலும் விமான  நிலையத்திலும் தமிழகம், டெல்லி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக தமிழக காவல்துறை ஐஜி சத்யமூர்த்தி, பாதுகாப்பு பிரிவு  கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் டெல்லி சென்று பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

jayalalitha room-not-use-ops

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இருக்கையை கூட ஓ.பி.எஸ். பயன்படுத்தவில்லை. அவருக்கான பதவியை அவர் மட்டுமே அனுபவிக்க வேண்டும். அதை நான் நெருங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அதேபோல் சட்டப்பேரவையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருளையும், அவரது அறையை கூட அவர் பயன்படுத்தவில்லை. தன்னுடையை அறையை முதலமைச்சர் அறையாக மாற்றி கொண்டார். இந்நிலையில், டெல்லியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தங்கிய அறையில் ஓ.பி.எஸ். தங்குவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இதனால், அவர் தனக்கென ஒரு அறையை ஒதுக்கி அங்கேயே தங்கினார் என்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios