சென்னை அப்பல்லோவில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற செய்தி கேள்விப்பட்டதும் அ.தி.மு.க். தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனையில் குவியத் தொடங்கினர். மக்கள் கண்ணீருடன் சோகத்துடன், சென்னையின் அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக நிற்கத் தொடங்கினர். 

அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல், சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த 60 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைகள் காரணமாக உடல் நலன் தேறிவந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து அவரை சந்தித்து, மருத்துவர்களிடம் உடல் நிலை குறித்து கேட்டுச் சென்றார்.

இந்த செய்தி கேட்டதும், அ.தி.மு.க. தீவிர விசுவாசிகள், தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு படையெடுத்து வரத்தொடங்கினர். 

ஆண்களும், பெண்களும் மருத்துவமனைக்கு வரும்போதே, கண்களில் கனத்த கண்ணீரோடும், மார்பிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டே வந்தனர். நேரம் செல்லச் செல்ல அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் மட்டுமின்ளி, அமைச்சர்கள் எம்.எல்.ஏ.கள் கூட்டமும், கட்சி பிரமுகர்களின் கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது இவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவைக் காணும ஆவலுடன் போலீசாரின்தடுப்புகளையும் மீறி தொண்டர்கள் செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவர் தனக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியான நிலையையும் தாண்டி மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். ஏராளமான தொண்டர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனால், இந்த செய்தி சென்னை நகரம் முழுவதும் பரவியதையடுத்து, கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. சாலையில் போக்குவரத்து குறைக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பஸ்கள் அளவும் குறைக்கப்பட்டது. 

சென்னையிலும் நகரில் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, கிரீம்ஸ்ரோடு, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கவலையுடன் அமர்ந்திருந்தனர். முதல்வர்ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த நல்லசெய்தி கிடைக்கும், மருத்துவர்கள் நல்ல செய்தியைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் பெரும்பாலான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அமர்ந்திருந்தனர்.