மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார் என செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், கடைகள் அடைக்கப்படலாம், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கருதி, பால், காய்கறிகள், பழங்கள் உணவுப்பொருட்கள் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.

சிறுநீரகக் கோளாறு, காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதவுக்கு லண்டன்மருத்துவர் பீலே, சிங்கப்பூர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குபின், அவர் உடல் நலம் தேறிவந்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தினார்கள்.

ஆனால், நேரம் செல்ல, செல்ல அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும்,லண்டன் டாக்டரும் அறிவித்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர், விடுப்பில் உள்ள அனைத்து போலீசாரும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலால், சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் நண்பகலுக்கு பின் விடுமுறை அறிவித்து, குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதனால், சென்னையில் பதற்றமான சூழல் ஏற்பட்டு வருவதையடுத்து, மக்கள் தங்களுக்கான உணவுப்பொருட்களையும், பால், காய்கறிகளையும் அடுத்த சில நாட்களுக்கு அதிகமாக வாங்கி வருகின்றனர்.இதனால், திடீரென பால், காய்கறிகள், உணவுப்பொருட்கள் விலை தேவை அதிகரித்து, விலை எகிறியது.
ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.100 வரையிலும் ஒரு சில கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால், விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டமாக பால், காய்கறிகள் உணவுப்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
