Asianet News TamilAsianet News Tamil

“ஜல்லிக்கட்டுக்காக கொந்தளிக்கும் தமிழகம்…!” – கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு…!

jallikkatu support-mkstalin-college-student
Author
First Published Jan 12, 2017, 11:00 AM IST

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி விட்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரியும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க வலியுறுத்தியும் சென்னை தரமணி டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கல்லூரி முன் கூடி பெருங்குடி எம்.ஜி.ஆர்.சாலையில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீண்டும் கல்லூரி முன் வந்தடைந்தனர். அங்கு, ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து சிறிது நேரம் கோஷமிட்டனர்.

மதுரை, அவனியாபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, புதுவை, செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலையில் காளை மாட்டுடன் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. 

இந்நிலையில் சென்னை நியு கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க கோரியும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்ற வலியுறுத்தியும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நியு கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, அவரும் கலந்து கொள்ள இருக்கிறார். இதில், ஏராளமான திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios