தமிழகம்  முழுதும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்வது மடிவது குறித்து அலட்சியம் காட்டும் மத்திய மாநில அரசுகள் மற்றும் ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஆண்டாவது கட்டாயம் நடக்குமா எனபது தெரியவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கட்டயம் நடக்கக வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளன.

மாணவர்கள் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இது தமிழகம் முழுதும் பரவி வருகிறது. பலமாவட்ங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் ,வாட்ஸ் அப் வலைதளங்கள் மூலமாக இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் மெரினாவில் குவிந்தது பெரிய அளவிலான வீச்சை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்று எழும்பூர் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் காலியிலிருந்தே உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டம் அனைத்து கல்லூரிகளிலும் பரவும் என தெரிகிறது.