தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம்அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் ஓபிஎஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துஆலோசனை நடத்தினார். மோடியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் தமிழகத்தில் போராட்டம் மேலும் வீரியமடைந்தது.

ஆனால்ஓபிஎஸ்சென்னை திரும்பாமல் டெல்லியில் இருந்த படியே ஜல்லிகிகட்டு நடத்துவது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து அவசரசட்ட வரைவு தயார் செய்யப்பட்டு அது மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகம் ஆகியவற்றால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் அந்த அவசரச்சட்டத்தில் இன்று கையெழுத்திடுவார் என எதிப்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றோ, நாளையோ ஜல்லிக்கட்டு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

ஆனால் ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்க்ள உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்தப்போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட அலங்காநல்லுரில் இன்று நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அவசரச் சட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்பு என பல்வேறு காரணங்களைக்காட்டி கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டும் இதே அவசர சட்டம், உச்சநீதிமன்றம் என மத்திய மாநில அரசுகள் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

அரசுகளின் இந்த பொறுப்பற்ற செயல்களால் வெறுத்துப்போன அலங்காநல்லுரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தற்போது ஆட்சியில் இருக்கும் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்தார்.
அப்போது ஆட்சியாளர்களே கீழே இறங்குங்கள், மாணவர்கள் ஆளட்டும் என உரக்க முழக்கமிட்டார்.இதை ஆமோதித்து அங்கிருந்தவர்களும் முழக்கமிட்டனர். அரசியல் கட்சியினரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துதான் இப்போராட்டத்தில் மாணவர்கள் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
