- Home
- Tamil Nadu News
- சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
அதாவது லட்சதீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
குற்றால அருவிகளில் குளிக்க தடை
இந்நிலையில் தமிழ்நாட்டில் விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது. தென்காசி வட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் இரவு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தென்காசி
மேலும் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லுார், கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், சேசபுரம் சிவகிரி மற்றும் செங்கோட்டையிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம், பணகுடி, ராதாபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்ளில் வானிலை மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

