- Home
- Tamil Nadu News
- வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது? ரொக்கம் எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்
வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது? ரொக்கம் எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்
Pongal Gift: 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தயாராகி வருகிறது. இதற்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டு, விநியோகத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 தை பொங்கல், 16 திருவள்ளுவர் தினம், 17 உழவர் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரொக்கம், இலவச வேட்டி - சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வந்தவுடன் நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 2026 ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட அரசாணை எதிர்நோக்கப்படுகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்தும் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைத் தவறாது பின்பற்றி இத்திட்டத்தினைச் சிறப்பான முறையில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டோக்கன்கள் விநியோகம் குறித்து சுற்றறிக்கையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவங்கப்படும் தேதி தனியே பின்னர் அறிவிக்கப்படும். மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப 02.01.2026-க்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நியாயவிலைக்கடைகள் நடத்தும் அனைத்து வகையான நிறுவனங்களுக்கும் (Agencies) பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திடத் தேவைப்படும் டோக்கன்களை கூட்டுறவுத்துறை மூலம் அச்சிட்டு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல குடும்ப அட்டைதாரர்களுக்குச் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள ஏதுவாக குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அட்டைதாரர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்.
முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். இடவசதியைப் பொறுத்து, இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நிறைவடையும் வகையில் டோக்கன்களில் தேதி குறிப்பிட்டு வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடை பணியாளர்களால் மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின்போது ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. எனவே, திமுக ஆட்சியில் அதைவிட கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர். தமிழக அரசும் ரூ.3000 அல்லது ரூ.5000 வழங்குவதா என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு 6ம் தேதியன்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

