தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தாமல், தமிழக மக்கள் உள்ளனர். இந்தாண்டு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து, மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி இன்று புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலை ரயிலை மறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கட்டாய விடுமுறையில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கிய மத்திய அரசு நடவடிக்கைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதேபோல் சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீர வேண்டும் என பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வராவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.