- Home
- Tamil Nadu News
- எடப்பாடியை ஓவர்டேக் செய்த விஜய்..! லயோலா கருத்து கணிப்பால் கதி கலங்கும் இபிஎஸ்..!
எடப்பாடியை ஓவர்டேக் செய்த விஜய்..! லயோலா கருத்து கணிப்பால் கதி கலங்கும் இபிஎஸ்..!
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்றும், விஜய் இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அரியணையில் திமுக
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 234 தொகுதிகளிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தொகுதியிலும் 54 விழுக்காடு நகரங்களிலும், 41 விழுக்காடு கிராமங்களிலும் என மொத்தமாக 81,375 நபர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் விஜய்..!
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்சித் தொடங்கிய விஜய் பழனிசாமியை ஓவர்டேக் செய்து இரண்டாம் இடத்தைப் பிடிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணி தான் வலுவாக இருக்கிறது, நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் 3வது இடம் தான் கிடைக்கும் என்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.
திமுகவுக்கு அதிக டேமேஜ்..!
விஜய் தலைமையிலான தவெக.வால் தமிழகத்தில் உள்ள எந்த பிரதான கட்சிக்கு பாதிப்பு என்ற கேள்விக்கு, திமுக என பெரும்பாலானோர் பதில் அளித்துள்ளனர். அதாவது தமிழக வெற்றி கழகத்தால் திமுக அதிக பாதிப்பை சந்திக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக விசிக, அதிமுக அதிகம் பாதிப்புக்குள்ளாகுமாம். பெரிதும் சேதத்தை சந்திக்கும் என்று சொல்லப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தான் டாப்பு..
புதிய வாக்காளர்களைக் கவரும் இளம் தலைவர் யார் என்ற கேள்விக்கு அனைத்து தலைவர்களையும் ஓரங்கட்டி விஜய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். விஜய்யைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து உதயநிதி 3ம் இடமும், சீமான் 4ம் இடமும் பிடிப்பதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

