உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது.

இந்தாண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டுள்ளதால், பதற்றமும் நிலவுகிறது.

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ.மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருகிறது.

மதுரையில் கடந்த ஒரு வாரமாக மாணவ.மாணவிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று தீவிரம் அடைந்துள்ளது. இன்று அதிகாலையிலேயே மதுரை காந்தி மியூசியம் அருகே திரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவ.மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தங்கள் கண்களில் கறுப்புத்துணி கட்டி முழக்கமிட்டு வருகின்றனர். நீதிதேவதையின் கண்கள்  கட்டப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்,

போராட்டத்திற்கு தங்களது வீடுகளில் அனுமதி கேட்டபோது போற்றோர்கள் மனமுவந்து அனுப்பி வைத்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

ரேஸ் கோர்ஸ் நோக்கி செல்லும் இந்த ஊர்வலத்தில் தொடர்ந்து மாணவ.மாணவிகளின் கூட்டம் அதிகரித்தபடி உள்ளது.

திரண்டு எழுந்துள்ள இந்த மாணவர் கூட்டத்திற்கு பதில் அளிக்குமா மத்திய அரசு?