Jallikattu : ஜல்லிக்கட்டு நடக்குமா..? பதறும் மதுரைவாசிகள்.. அமைச்சர் சொன்ன பகீர் செய்தி..
ஒமைக்கிரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இந்த வருடம் நடக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் காட்டிலும் ஒமைக்கிரான் வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒமைக்கிரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது இந்த வைரஸ். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகள் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்படுமா ? என்ற கேள்வி பரவலாக எழுந்து இருக்கிறது.தமிழ்நாட்டில் வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய உலகப்புகழ் பெற்ற ஜல்லிகட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டத்திற்கே உரித்தானவை.
வரும் தை மாதம் நடைபெறவுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, இப்போதே காளைகளை தயார் படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. சிவகங்கை மாவட்டம் கட்டிகுளம் பகுதியில், காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் பல்வேறு பயிற்சிகளை, அளிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி மற்றும் மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒமைக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு தடை விதிக்காமல் இருந்தால் ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் என்றார்.
ஆனால், தொற்று பரவல் அதிகமானால் கட்டுபாடுகள் விதிக்கும்பட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது சந்தேகம்’ என்று கூறினார்.இதனால் இந்த வருடம் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறுமா ? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்து இருக்கிறது.