சிவகங்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் மார்ச் 24-ஆம் தேதி  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
 
சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பின் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. 

அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார். 

இந்தக் கூட்டத்தில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். 

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். 

ஊதியக்குழு அறிவிப்பில் மறுக்கப்பட்ட 21 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி சிவகங்கையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பேரணியில் ஏராளமான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களை பங்கேற்கச் செய்ய மார்ச்  18-ஆம் தேதிக்குள் வட்டாரத் தலைநகரங்களில் கூட்டங்கள் நடத்துவது எனவும், மார்ச்  19  முதல் 23 வரை ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

அதன்பின்னும் தமிழக அரசு மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லையெனில், வரும் மே 8-ஆம் தேதி இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கிய முற்றுகைப் போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட உறுப்பினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.