நீலகிரி

நீலகிரியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடின. ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஜாக்டோ – ஜியோ (தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) சார்பில், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டது.

“புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய தாலுகாக்களில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும், சாலை மறியலும் நேற்று முன்தினம் தொடங்கியது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இருந்தும், நீலகிரி மாவட்ட ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஜெயசீலன் (ஜாக்டோ), ஆஸ்ரா (ஜியோ) ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

20 சதவீத இடைக்கால நிவாரணத்தை கடந்த 2016–ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய மூன்று தாலுகாக்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய அனைத்து துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் என 400–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் பங்கேற்றதால், அரசு அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களைக் கொண்டு அலுவலகப் பணிகள் நடைபெற்றன.

இருப்பினும்,, ஊட்டியில் உள்ள ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வராததால் வெறிச்சோடின.

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகம், கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் தாலுகா, கூடலூர் தாலுகா போன்ற பகுதிகளிலும் இந்த அமைப்பினர் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருந்தும், ஆசிரியர்கள் யாரும் வராததால் மாணவ– மாணவிகள் பள்ளிக்கூட மைதானங்கள், வகுப்பறைகளில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.