திருச்சியில் ஒபிஎஸ்-ஐ ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் வீட்டை சுற்றி வளைக்க முயன்ற தீபா ஆதரவாளர்கள் 105 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழக சட்டசபையில் யாருக்கு பெரும்பான்மை என்பதை நிரூபிக்க இன்று (சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சி காந்தி சந்தை மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று தீபா ஆதரவாளர்கள் திரண்டனர். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. சௌந்தரராஜன் தலைமையில் தாங்கினார்.
அப்போது அவர்கள், சட்டசபையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க விடக் கூடாது என்று கூறி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் காந்தி சந்தை பகுதியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் வீட்டை சுற்றி வளைத்து முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் ஒரு பிரிவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 105 பேரை காவலாளர்கள் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது அவர்கள் சசிகலாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், தீபா ஆதரவாளர்களும் நேற்று ஒன்று திரண்டு மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணிகள் விடுதி முன்பு கூடினர்.
அப்போது அவர்கள் அதிமுக-வை மீட்டெடுப்போம், எம்எல்ஏ-க்கள் நியாயமாக செயல்பட வேண்டும், சுயமாக முடிவெடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் மருங்காபுரி முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி தலைமையில் ஊர்வலம் நடத்த முயற்சி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவலாளர்கள் ஊர்வலம் செல்ல முயன்ற 121 பேரை கைது செய்தனர்.
