சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க முடியாது.? கோப்புகளை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு -ஆளுநர் மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லையென திமுக சார்பாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் பல சட்ட மசோதாக்களை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. தற்போது நான்கு உறுப்பினர் பதவிகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார். பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த இடத்தை நிரப்ப தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தலைவர்- ஒப்புதல் அளிக்காத ஆளுநர்
இந்தநிலையில் தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பெயரை பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்கவில்லையென நேற்று தகவல் வெளியானது. இதனையடுத்து ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக தமிழக அரசும் விளக்கம் அளித்துள்ளது. இருந்த போதும் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இந்தநிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்
டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லைய என அந்த கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய விவரங்களை தமிழக அரசிடம் ஆளுநர் ரவி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆளுநரின் இந்த நடவடிக்கை காரணமாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.