It is not good that chief minister criticize the people attacked by police in Kathiramangalam - Muthrasan

புதுக்கோட்டை

கதிராமங்கலத்தில் மக்களை காவல்துறை தாக்கியதற்கு சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் மக்களை குறைக்கூறி பதில் சொல்லியிருப்பது நல்லதல்ல என்று கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ள “இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்” பொதுக்கூட்ட விளக்க தெருமுனை பிரச்சாரம் கீரமங்கலத்தில் நேற்று நடைப்பெற்றது.

இதற்கு கீரமங்கலம் நகரச் செயலாளர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செங்கோடன், விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்றுப் பேசினார். இதில் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திருஞானம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“கதிராமங்கலத்தில் மக்களை வீடு வரைச் சென்று காவல்துறை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அந்தப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கேள்விக்கு சட்டமன்ற மரபை மீறி மக்களை குறைக்கூறி பதில் சொல்லி இருப்பது நல்லதல்ல.

நெடுவாசலில் ஐட்ரோகார்பன் திட்டத்தை மாநில அரசு வேண்டுமானால் ரத்து செய்யட்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பது தவறானது.

நெடுவாசல் போராட்டம் இத்தனை நாள் நடக்க மத்திய அரசு நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதுதான் காரணம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும்.

ஐட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மோடியின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. உள்ளது.

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடியை ரத்து செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை சொன்ன தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் செயல். தமிழக அரசு அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் சாதாரண மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.