மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Mayiladuthurai DSP Sundaresan Suspended: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். நேர்மையான அதிகாரி என பெயரடுத்த இவர் சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டு

இப்படியாக மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் கார் உயரதிகாரிகளால் பறிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் நடந்து பணிக்கு சென்று வருவதாகவும் புகைப்படங்கள் வெளியாயின. இது குறித்து வெளிப்படையாக பேசிய டிஎஸ்பி சுந்தரேசன் தான் நேர்மையாக இருப்பதால் அதிகாரிகள் தன்னை பழிவாங்குவதாக தெரிவித்தார். ஆனால் டிஎஸ்பியின் இந்த குற்றச்சாட்டுகளை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார். சுந்தரேசன் கூறிய தகவல் அனைத்தும் தவறானவை என்று அவர் கூறினார்.

சுந்தரேசன் மீது காவல்துறை அடுக்கடுக்கான புகார்கள்

இதனைத் தொடர்ந்து சுந்தரேசன் மீது காவல்துறை சார்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. டிஎஸ்பி சுந்தரேசன் 2005 - 2006 வரை நந்தம்பாக்கத்தில் பணிபுரிந்தபோது வழக்கு ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என ஒழுங்கு நடவடிக்கை, வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்தது, 2008ல் துரைப்பாக்கம் காவல் எல்லையில் முடிவுற்ற வழக்கை சுட்டிக்காட்டி மிரட்டி ரூ.40,000 கையூட்டு வாங்கியது, துரைப்பாக்கம் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூ.3000 வாங்கியது, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது பெண்ணிடம் புகார் வாங்காமல் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பழகி வந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் டிஎஸ்பி சுந்தரேசன் மீது சுமத்தப்பட்டது.

டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம்

இந்நிலையில், உயரதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி மண்டல ஐஜிக்கு தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.