ஒலிம்பியாட் செஸ் போட்டி நிறைவு விழா..! தோனி பங்கேற்கவில்லை.. காரணம் என்ன தெரியுமா.?
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தோனி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் நிறைவு விழாவில் கலந்து கொள்ளவில்லையென்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பியாட் செஸ் நிறைவு விழா
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கியது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஒலிம்பியாட் செஸ் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வெற்றியை குவித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் இன்றோடு நிறைவு பெறுகிறது.
பிரம்மாண்டமான நிறைவு விழா
இதனையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் 10 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறும் என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்று மாலையே விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. செஸ் போட்டியில் வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கமானது செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் எந்த திசையில் பார்த்தாலும் செஸ் விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவுக்கான அழைப்பிதழும் செஸ் காய்களில் ஒன்றான குதிரை வடிவில் அச்சிடப்பட்டு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
தோனி பங்கேற்கவில்லை
இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஏராளமான தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர். இந்தநிலையில் தோனி வெளிநாட்டில் இருப்பதால் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தோனி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
அரசு பேருந்துகள் தனியாருக்கு தாரைவார்ப்பா? போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்