கோவை, மதுரையை நோக்கி வரும் ஐடி நிறுவனங்கள்: சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆர் தகவல்!
கோவை, மதுரையை நோக்கி ஐடி நிறுவனங்கள் வருவதாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 22ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இன்றைய கேள்வி-பதில் நேரத்தின் போது, காரமடை நகராட்சி பகுதியில், தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முன்வருமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “கோவை விளாங்குறிச்சியில், 61.59 ஏக்கர் பரப்பளவில், ரூ.107 கோடி முதலீட்டில், எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கியுள்ளது. அப்பகுதியில் 3 ஆயிரத்து 524 சதுர அடியில் நிர்வாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில், அப்பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 ஆயிரத்து 809 பணியாளர்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில், 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. எனவே, காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டிய தேவை இல்லை.” என்றார்.
தொடர்ந்து, “மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் படித்த இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சென்னை, பெங்களூரு, கோவையிலுள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அமைத்து தர அரசு முன் வருமா?” என ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
சிவகங்கையை குறி வைக்கும் திமுக பிரமுகர்கள்: உதயநிதி சேனல் வழியாக காய் நகர்த்தும் சினிமா புள்ளி?
அதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குவது ஐடி துறைதான். ஒட்டுமொத்த இந்தியாவில் ஓராண்டுக்கு 17 சதவீதம் பொறியாளர்கள் தமிழ்நாட்டில்தான் இருந்துதான் உருவாகிறார்கள். அதனால் மனித வளம் அதிகம் இருக்கும் நம்மை தேடி அனைத்து ஐடி நிறுவனங்களும் வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களின் திறமையை பயன்படுத்திக்கொள்ள ஐடி நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்குகிறார்கள். இதற்காகவே ஐடி துறைக்கு சிறப்பான ஊக்கத்தினை கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் சராசரியாக 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள், புதிதாக கட்டடம் கட்டுவார்கள். ஆனால், கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.” என்றார்.
மேலும், “இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி பார்க் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள், கோவை மற்றும் மதுரையை நோக்கி வருகின்றன. வரும் பிப்ரவரி 23 மற்றும் 24ஆம் தேதி தமிழகத்தில் ஐடி மாநாடு நடைபெற உள்ளது. அதில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஈர்க்கப்படும். பல நாடுகளுக்கும் சென்று ஐடி நிறுவனங்களிடம் பேசி வருகிறோம். சிறப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.” என்றும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்தார்.