Asianet News TamilAsianet News Tamil

ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை… அதிர்ச்சியை ஏற்படுத்திய தமிழக அரசு!!

ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசின் கோவை மாவட்ட வன அலுவலகம் பதில் அளித்துள்ளது.  

Isha Yoga Center not occupied elephants route
Author
Coimbatore, First Published Dec 13, 2021, 8:40 PM IST

ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக அரசின் கோவை மாவட்ட வன அலுவலகம் பதில் அளித்துள்ளது.  கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் வனத்துறை நிலங்கள், யானை வழித்தடங்கள் ஈஷா மையத்தால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியான நிலையில், இதுதொடர்பான ஆர்டிஐ கேள்விகளுக்கு, பொது தகவல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் (பொது), கோவை மாவட்ட வன அலுவலகம், அளித்துள்ள பதிலில், வனப்பகுதியில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை. அதேபோல வனத்தில் ஈஷாவின் கட்டடங்கள் எதுவும் கட்டப்படவில்லை. கோவை வனப்பகுதியில் வரையறுக்கப்பட்ட யானை வழித்தடம் என்பது இல்லை. ஆகவே ஈஷா யோகா மையம் யானை வழித்தடத்தை இடைமறித்து கட்டப்பட்டதாக சொல்ல முடியாது. யானை வழித்தடங்கள் எதுவும் ஈஷா யோகா மையம் அருகில் இல்லை. யானைகளின் வாழ்விடங்களையும் ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Isha Yoga Center not occupied elephants route

ஆனால், ஈஷா யோகா மையம் அமைந்துள்ள பகுதி யானைகள் வழித்தடம் என்று 17.08.2012 தேதியிட்ட கடிதத்தில் அன்றைய மாவட்ட வன அலுவலர் கோவை மாவட்ட முதன்மை தலைமை வனப்பாதுக்காப்பாளர் மற்றும் வனத்துறை தலைவருக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், ஈஷா மையத்தில் மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், மின் அதிர்வுகளால் தாக்கப்படும் யானைகள் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு வனத்துறை அலுவலர் அனுப்பிய அறிக்கையும், தற்போதைய ஆர்.டி.ஐ. பதிலும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்திலுள்ள மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட, மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் அனுமதி வாங்காமல் சுமார் 4,27,700 சதுர மீட்டர் அளவில் வனப்பகுதியில் கட்டிடங்களை கட்டியுள்ள ஈஷா மையத்துக்கு கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியது. முறையான அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டது. மேலும், அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் இடிக்கவும் நிர்வாக அமைப்புகளுக்கு அனுமதி கொடுத்து ஆணை பிறப்பித்தது.

Isha Yoga Center not occupied elephants route

2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணை இன்றும் அமலில் இருக்கிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு துணை போகும் வகையில், 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னதாக மேலே குறிப்பிடப்பட்ட மலைப் பகுதிகளில் நிலம் வாங்கியவர்கள் அந்தப் பகுதிகளில் வீட்டுமனை வியாபாரம் செய்யும் வகையிலும், கட்டிடங்கள் எழுப்புவதற்கு அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டவிதிமுறைகளை வகுத்து அரசாணையை கடந்த 30.3.2020 பிறப்பித்ததும் விவாதத்தை கிளப்பியது. அதேபோல், ஈஷா யோகா மையம் வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் உள்ளதாக தேர்தலுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் தற்போதைய தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். வெள்ளியங்கிரி பகுதியில் சாடிவயலுக்கும், தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில்தான் ஈஷா மையம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாக பல்வேறு அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்த சூழலில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு பதிலளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios