எங்க சூர்யாவை விடுதலை செய்யச் சொல்வது பீதியா இருக்கா?: நிர்மலா சீதாராமன் கேள்வி
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் பொய்யையும் பீதியையும் பரப்புவதாக மாக்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். அதில், தங்கள் கட்சித் தொண்டர் சூர்யா கைது செய்யப்பட்டது பொய்யா என்றும் அவரை விடுதலை செய்யுமாறு கோருவது பீதியைப் பரப்புவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அதைக் கண்டுகொள்ளமால் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான அவதூறு வழக்கில், சென்னையில் சூர்யா கைது செய்யப்பட்டார். மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
எஸ்.ஜி. சூர்யா மீதான பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்.. தமிழக காவல்துறைக்கு பாஜக கடிதம்
சூர்யா கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து அவரை விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளனர். ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், "பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாரமன், ராஜீவ் சந்திரசேகரின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், "வதந்தி உங்களின் ஆயுதம். உண்மை எங்களின் கவசம்" எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மதிப்பிற்குறிய நாடளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களே, எஸ்.ஜி. சூர்யா கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’?" என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.
மேலும், "ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை." என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு