பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு
பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு கம்யூனிஸ்டுகளே பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்ணாடத்தில் தூய்மைப் பணியாளர் மரணம் தொடர்பாக விமரசித்த தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளரின் மரணத்துக்கு தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினரே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் அதைக் கண்டுகொள்ளமால் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் எஸ்.ஜி.சூர்யா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான அவதூறு வழக்கில், சென்னையில் சூர்யா கைது செய்யப்பட்டார். மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ள அண்ணாமலை, "எஸ்.ஜி. சூர்யா ஒரு வார்த்தை கூட புண்படுத்தும் வகையில் பேசவில்லை. மலக்குழி மரணங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது... தமிழ்நாடு காவல்துறையும், முதல்வரும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். சூர்யா இப்படியே தொடர்ந்து செயல்படுவார் என உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:
2018 முதல் 2022 வரை, தமிழகத்தில் மட்டும் 52 தூய்மைப் பணியாளர்கள், பணியில் இருக்கும்போது உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே உச்சகட்ட உயிரிழப்பு தமிழகத்தில் தான்.
பெண்ணாடம் பேரூராட்சியில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர், ஒரு தூய்மைப் பணியாளரை மலம் கழிந்த கழிவு நீரில் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து, அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடையக் காரணமாக இருந்துள்ளார். குற்றம் செய்த அந்த பேரூராட்சி உறுப்பினர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. ஆனால், இதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, எங்கள் மாநிலச் செயலாளர் திரு எஸ்.ஜி. சூர்யா அவர்களைக் கைது செய்துள்ளனர்.
பொதுவுடைமை என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூட, தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எந்த விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் திமுகவின் கிளை அலுவலகமாகத்தான் செயல்படுகின்றனர். வியர்வை சிந்தி வேலை செய்யும் தொழிலாளர்களிடம், பெயரளவில் சமூக நீதி பேசிக் காலம் காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்தக் காலாவதியான கம்யூனிஸ்ட்டுகள்.
பெண்ணாடம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு, தமிழக கம்யூனிஸ்ட் கட்சியே பொறுப்பு.
இவ்வாறு அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
100க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை மழலை மொழியில் ஒப்புவிக்கும் 4 வயது குழந்தை