மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேசப் போட்டியில் தங்கங்களை குவித்த வேலூர் பசங்க... பெருமை கொள் தமிழா!
நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் வேலூரைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மூன்று தங்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று மாவட்டத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
வேலூர்
நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் வேலூரைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மூன்று தங்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று மாவட்டத்திற்கும், இந்திய நாட்டிற்கும் பெருமைத் தேடித் தந்துள்ளனர்.
'தென்மேற்கு ஆசிய நாடுகள் - மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்' நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் இன்று (திங்கள்கிழமை) வரை நடக்கின்றன.
இப்போட்டியில் இந்தியாவின் சார்பில் 120 வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்படி, பொதுப் பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காத்தமுத்துவேல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, நேதாஜி நகரைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற காவலாளர் கேசவன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது நான்காவது மகன் காத்தமுத்துவேல். எம்.ஏ., பி.எட் படித்துள்ள இவர் மாற்றுத்திறனாளி.
இவர் பதினோறாம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் ஏராளமான பதக்கங்களை வென்று சொந்த ஊருக்கு பெருமைச் சேர்த்துள்ளார் காத்தமுத்துவேல்.
தற்போது ஒருபடி மேலேச் சென்று நேபாளத்தில் நடைபெற்றப் சர்வதேச போட்டிகளில் இரண்டு தங்கங்களை வென்று இந்தியாவிற்கே பெருமைச் சேர்த்துள்ளார்.
இதேபோன்று இப்போட்டியில் சக்கர நாற்காலி பிரிவில் வட்டு எறிதலில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் வெங்கடாச்சலம். இவரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம், காமாட்சியம்மன் பேட்டையைச் சேர்ந்த தொழிலாளி மணி. இவரது மனைவி வளர்மதி. இத்தம்பதியின் மகன் வெங்கடாச்சலம். மாற்றுத் திறனாளியான இவரும் சிறு வயது முதலே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர். இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சொந்த ஊரை பெருமை அடையச் செய்துள்ளார்.
தற்போது இவர்கள் இருவராலும் சர்வதேச அளவில் இந்தியா தலைத்தூக்கியுள்ளது. அதிலும், தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியுள்ளனர்.