விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போது உள்ள சூழ்நிலையில் பருவநிலை மாற்றத்தால் சரியான பருவத்தில் பருவமழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. இதனால் விவாயிகள் சரியான பருவத்தில் விதைப்பு செய்ய இயலவில்லை. பயிர்கள் காய்ந்து விடுகிறது. அறுவடைக்கு பின் அதிக மழையால் பயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புள்ளாகின்றனர்.
இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளால் ராபிபருவத்தில் பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகள் பயிர் இழப்பீடு பெற பிரதம மந்திரியின் புதிய பயிர்காப்பீட்டு திட்டமான பிரதம மந்திரியின் பசல் பீமா யோஜனா வழி வகை செய்கிறது. புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் குறுவட்ட (பிர்க்கா) அளவிலான அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் தகுதியுடைவர்கள் ஆவர்.
குத்தகை செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் சேரலாம். பயிர் கடன் பெறும் மற்றும் பயிர் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, ராகி, கம்பு, எள் ஆகிய வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத்தொகையில் இருந்து 1.5 சதவீதம் பிரீமியத்தொகை செலுத்தவேண்டும்.
இந்த பிரீமியத்தொகையை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (அல்லது) தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏதாவது ஒன்றில் செலுத்தி இந்த திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
