இந்திய மருத்துவச் சங்கத்தை கலைத்துவிட்டு புதிய மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கு கண்டனம் தெரிவித்து கும்பகோணம் உதவி ஆட்சியரிடம் மருத்துவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்திய மருத்துவச் சங்கத்தை கலைத்துவிட்டு புதிய மருத்துவ ஆணையத்தை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் நேற்று நாடு முழுவதும் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இந்திய மருத்துவ சங்க கும்பகோணம் கிளை தலைவர் டாக்டர் எம்.பாலமுருகன், செயலாளர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன், பொருளாளர் டாக்டர் டி.முத்தையாசெல்வகுமார் மற்றும் சங்க நிர்வாகிகளான டாக்டர்கள் தியாகராஜன், ரகுபதி, மீனாட்சி, மஞ்சுளா, ராஜசேகர், ஆகியோர் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமாரிடம் இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்க கூடாது என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.

முன்னதாக உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய மருத்துவ சங்க கும்பகோணம் கிளை தலைவர் டாக்டர் எம்.பாலமுருகன், செயலாளர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“இந்திய மருத்துவ சங்கம் என்பது மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மற்றும் மத்திய அரசின் நியமன உறுப்பினர்கள் இணைந்து ஜனநாயக பிரதிநிதித்துவ அடிப்படையில் செயல்படும் அமைப்பு ஆகும்.

தற்போது மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள வரைவு மசோதாவில் மத்திய அரசு சார்ந்த நியமன உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இது இந்திய ஜனநாயக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது ஆகும். இதில் 40 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் மருத்துவம் சாராத தொழில் செய்பவர்கள் ஆவர். மாநில மருத்துவ சங்க அமைப்பில் இவர்கள் தலையிடவும், நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் கொடுத்திருப்பது தேசிய கூட்டாட்சி பண்புகளுக்கு எதிரானது. நவீன மருத்துவம் செய்ய எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு மட்டும்தான் ஏற்புடையது என்பது மருத்துவ சங்க சட்டம் ஆகும். எனவே மத்திய அரசு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சங்கத்தை கலைக்க கூடாது என கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.