சாதி பார்த்து என்னை அறிவாலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. என்னைப்போல தாழ்த்தப்பட்ட சாதியினர் வெளியே நிற்கிறார்கள். அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் கட்சிக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.
அறிவாலயத்திற்குள் செல்ல விடாமல் சாதி பார்த்து போலீசார் தடுத்ததாக திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன் ஆவேசப்பட்டுள்ளார். பூச்சி முருகன் சாதி பார்த்து தடுப்பதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் வெளியில் நிற்பதாகவும் ஆடலரசன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
திமுகழ தலைமைச் செயலகமான அறிவாலய வாசலில், திருத்துறைப்பூண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆடலரசன், தன்னை தலைமைச் செயலகத்திற்குள் செல்ல விடாமல் காவல்துறை தடுப்பதாகக் கூறி ஆவேசமாகப் பேசினார். “ நான் எஸ்.சி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். எதற்காக உள்ளே போகிறீர்கள் எனக் கேட்டனர். நான் தலைவரை சந்திக்க வேண்டும் என்றேன். காரணமே இல்லாமல் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள். சாதி பார்த்து என்னை அறிவாலயத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. என்னைப்போல தாழ்த்தப்பட்ட சாதியினர் வெளியே நிற்கிறார்கள். அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் கட்சிக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. என்ற மாண்பையும் காவல்துறை மதிக்கவில்லை. பூச்சி முருகன் சாதி பார்த்துத் தன்னை வேண்டுமென்றே அறிவாலயத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கிறார். எனக்கு எதற்கு இந்த திமுக உறுப்பினர் அட்டை. அதை நான் தூக்கிப்போடப்போகிறேன் என்றார். ஆடலரசனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகளாகக் கவுன்சிலராகப் பதவி வகிக்கும் தேனியில் இருந்து வந்த மற்றொருவரும் தன்னையும் அனுமதிக்கவில்லை என்று கூறி ஆவேசமானார்.
பின்னர் ஒருவழியாக அறிவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ஆடலரசன், வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘நான் தலைவரை பார்த்து என் தொகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினேன். அவரும் அதைக் கேட்டுக் கொண்டார். பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகத் தெரிவித்துள்ளார். எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை’’ எனக் கூறினார். அவரிடம் பூச்சி முருகன் உள்ளே அனுமதிக்காதது குறித்து தலைமையிடம் கூறினீர்களா? எனக் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அந்தப்பிரச்சினை குறித்து பேச வேண்டாம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை’’ எனக்கூறி தடாலடியாக பல்டியடித்தார்.

