தமிழகத்தில் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில் புதிய சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தத் தேர்தலில் ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் களமிறங்க உள்ளன. இதேபோன்று, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட அறிவிக்கப்பட்டு உள்ளதால், நான்கு முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தேர்தலை முன்னிட்டு, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சுருக்கத் திருத்தப் பணிகள் (Special Summary Revision - SSR) நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் 11-ஆம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் இதற்கு முன் 68,467 வாக்குச் சாவடிகள் இருந்தன. மறுசீரமைப்புக்குப் பிறகு, வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 75,035 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு நடவடிக்கை

வாக்காளர்களுக்குச் சிரமத்தைக் குறைக்கவும், அதிக வாக்காளர்களை உள்ளடக்கிய சாவடிகளைப் பிரிக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில், புதிதாக 6,568 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2,509 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடிகள் இடமாற்றம், பெயர் மாற்றம், இணைத்தல் போன்ற சீரமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சீரமைக்கப்பட்ட மற்றும் அதிகரிக்கப்பட்ட வாக்குச் சாவடிகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்படும்.