IndiGo Flight: இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திலும், அந்த நிறுவனத்தின் பேருந்திலும் ஏசி வேலை செய்யாமல் பயணிகள் அவதிக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ விமான நிறுவனம் அமைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் விமான சேவைகளை இயக்கி வருகிறது. குறிப்பாக மிக குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் இந்த விமானத்துக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்.
இண்டிகோ விமானத்தை குறைகூறிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
அதே வேளையில் பாதுகாப்பு குறைபாடு, தாமதமாக புறப்படுதல், தாமதமாக வந்து சேருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இண்டிகோ விமானம் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திலும் ஏசி வேலை செய்யவில்லை. அந்த நிறுவனத்தின் பேருந்திலும் ஏசி வேலை செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
விமானத்தை விட பஸ் மோசம்
இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்''இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வணக்கம். பாதுகாப்பு குறித்த உங்கள் அக்கறை எங்களுக்குப் புரிகிறது. உங்கள் ATR விமானத்தின் ஏசி குறைபாடு காரனமாக தாய்மார்களும் வயதானவர்களும் மூச்சுத் திணறல் அடைந்து மிகவும் விரக்தியடைந்துள்ளனர். உங்கள் பேருந்து இதைவிட மோசமாக உள்ளது. பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் காத்திருந்து மீண்டும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள். பேருந்து ஓட்டுநர் பேருந்தை குளிர்விக்க நிழலில் நிறுத்தியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு இதை விட மோசம் அமைச்சரே
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் பதிவுக்கு கீழே பல்வேறு தரப்பினர் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ''இண்டிகோவின் ATR விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி. இண்டிகோ இந்த பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்'' என்று ஒரு சிலர் கருத்துகளை கூறி வருகின்றனர். அதே வேளையில் ஒரு சிலர் ''நம்முடைய தமிழக அரசு பேருந்து இதை விட மோசமாக உள்ளது. அதை முதலில் அமைச்சர் கவனிக்க வேண்டும்'' என்று தெரிவித்து வருகின்றனர்.
