திருநெல்வேலியில் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 16 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இந்திய மருத்துவக் கழகத் தலைவர் பிரதாப் ஞானமுத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மருத்துவக் கல்லூரி, மருத்துவம் சார்ந்த கல்வி குறித்து வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு வரும் இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பில் மருத்துவர்கள் மட்டும் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அரசு இந்த அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. இதில் மருத்துவர்கள் அல்லாத ஐ.ஏ.எஸ். மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

அலோபதி மருத்துவம் பயிலாத சித்தா, யூனானி போன்ற மருத்துவர்களும் அலோபதி சிகிச்சை அளிக்கும் முறையை அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மருத்துவர்கள் பயிற்சிக்கு பிறகு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வரும் புதன்கிழமை (நவ. 16) அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த இந்திய மருத்துவக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் தர்னாப் போராட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். இப்போராட்டத்தால் மருத்துவச் சேவை பாதிக்கப்படாது” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது, அமைப்பின் மாவட்டச் செயலர் எம். அபுபக்கர், பொருளாளர் பிரான்சிஸ்ராய் ஆகியோர் உடனிருந்தனர்.