தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞருக்கு அமெரிக்கா விருது!
இந்திய குழந்தைகள் உரிமை வழக்கறிஞருக்கு அமெரிக்க தொழிலாளர் துறையின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான லலிதா நடராஜனுக்கு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான, அமெரிக்க தொழிலாளர் துறையின் 2023 இக்பால் மசிஹ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் நடந்த விழாவில், தூதரக ஜெனரல் ஜூடித் ரவின் இந்த விருதை லலிதா நடராஜனுக்கு வழங்கினார்.
தென்னிந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டத்தில் லலிதா நடராஜன் ஒரு தலைவராக செயல்பட்டதாகவும், கடத்தலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, குறிப்பாக கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களை மீட்டு மீண்டும் சமூகத்தில் இணைக்க அவர் உதவுகிறார் என சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் பிரச்சினைகளில் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் லலிதா நடராஜன் வழங்கி வருகிறார்.
நீட் தேர்வு முடிவுகள் : முதல் 10 இடங்களில் 4 இடங்களை பிடித்த தமிழக மாணவர்கள்!
“இந்த விருது குழந்தைகளின் நலனுக்காகப் பணியாற்ற என்னை மேலும் ஊக்குவிக்கும். குழந்தைகள் நலக் குழுவின் உறுப்பினராக, பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகள், நீதித்துறை மற்றும் காவல்துறையுடன் நான் நெருக்கமாகப் பணியாற்றி குழந்தைகள் நல உரிமை மீறல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்து வருகிறேன்.” என சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய லலிதா நடராஜன் தெரிவித்துள்ளார்.
கடத்தல் மற்றும் கொத்தடிமை முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அமைதியையும், நல்ல வாழ்க்கை முறையையும் ஏற்படுத்தித்தர பல ஆண்டுகளாக தாம் போராடி வருவதாகவும் லலிதா நடராஜன் தெரிவித்துள்ளார்.
“லலிதா நடராஜனின் துணிச்சலான முயற்சிகள் இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான சமூக நீதியைப் பெறுவதற்கு பங்களித்துள்ளன. இருபது ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் பணியாற்றி, கல் குவாரிகள், கைத்தறி ஆலைகள் முதல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் வரை மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொழில்துறைகளில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்படும் குழந்தைகளை அவர் மீட்டெடுத்துள்ளார்.” என தூதரக ஜெனரல் ஜூடித் ரவின் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான இந்திய குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய லலிதா நடராஜனின் பணியை இந்த விருது அங்கீகரிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இக்பால் மசிஹ் விருது என்பது 2008 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை எதிர்த்துப் போராடுவதற்கான அசாதாரண பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு எதிரான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.