சர்வதேச அளவிலான சமையல் போட்டிக்கான ஒலிம்பிக்.. 124 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்
22 நாடுகளைச் சேர்ந்த 2000 சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு இந்தியா பதக்கங்களை வென்றுள்ளதாக தெரிவித்துள்ள தென்னிந்திய செஃப்ஸ் அசோசியேஷன் தலைவர் செஃப் தாமு, 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச சமையல் போட்டி
இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட் ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள், ஜூனியர் பிரிவில் போட்டியிட்டனர். இதன் போட்டிகளில் பங்கேற்ற செஃப் ஸ்ரேயா அனிஷ் - 1 தங்கம் , 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் சரவண ஜெகன் மற்றும் செஃப் ஜோகப்பா புனித் ஆகியோர் தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்களை கைப்பற்றிய தென்னிந்திய செஃப்
செஃப் அங்கித் கே ஷெட்டி - 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் முலம்குழியில் ஆல்பர்ட் ஆகாஷ் ஜார்ஜ் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். உலகெங்கிலும் உள்ள தலை சிறந்த சமையல் நிபுணர்களுடன் போட்டியிட்டு இந்த பதக்கங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) தலைவர் செஃப் தாமு, பொதுச்செயலாளர் சீதாராம் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தாமு, தென்னிந்திய செஃப் அசோசியேஷன் அணி 10 பதக்கங்களை வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு முதல்படி
குறிப்பாக இந்த அணி 22 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 2000 சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்றும், இந்த வெற்றியின் பின்னணியில் SICA பயிற்சியாளர்களின் பங்களிப்பும் மிகப்பெரிய அளவில் உதவியது என்றும் செஃப் தாமு தெரிவித்தார். சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைவர் பூமிநாதன் கூறுகையில்,
இந்த வெற்றி இனிமேல் இந்தியா வெல்லப்போகும் தங்கப்பதக்கங்களுக்கு முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார். 3 தங்கபதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு தென்னிந்திய செஃப் அசோசியேஷன் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். சமையல் கலை என்றாலே தென்னிந்தியா தான் என்கிற நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்
ரொம்ப விலை கம்மி.. குறைந்த விலையில் அந்தமானை சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு..