துணை ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். வேட்புமனு தாக்கல் நிறைவடைய 2 நாட்கள் உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், காதர் மொய்தீன், வைகோ, திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

துணை ஜனாதிபதி தேர்தல்

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினத்துடன் நிறைவடைகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேவேளையில், இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

இந்தச் சந்திப்பின்போது, துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியின் வியூகம், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விவாதித்தார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 50வது திருமண நாளை கொண்டாடுவதையொட்டி, கூட்டணி கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பு பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…