சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்வு.. முதலமைச்சர் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..?
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின விழா உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். பின்னர், அவர் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், " தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. எண்ணற்ற தியாகிகளையும் போராளிகளையும் நம் வரலாறு கண்டிருக்கிறது. முதலில் நாட்டு விடுதலைக்காகவும், பின்னர் சமூக விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியார், மகாத்மா காந்தி மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார்.
இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞரையும் நினைவுகூர்கிறேன். இந்திய துணைக்கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான். அந்த வகையில், மூவர்ணக் கொடியை ஏற்றும் போது ஒரு முதலமைச்சராக நான் அடையும் மகிச்சியை விட தமிழன் என்ற அடிப்படையில் அடையும் உணர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. இந்த ஆண்டிற்கான நல்லாளுமை விருது பெற்றவர்கள் விவரம்..
தமிழக அரசு சார்பில் 1095 இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் நிதிக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1966 ஆம் ஆண்டு முதல் விடுதலை போராட்ட தியாகிகளுக்கும், அவர் இறக்க நேரிட்டால், அவரது குடும்பங்களுக்கும், வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் அளிக்கக்கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநில அரசின் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் குடும்ப ஓய்வூதியம், ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும் படிக்க:சிறந்த மாநகராட்சி விருதை சேலம் தட்டி சென்றது.. 2022 ஆண்டிற்கான சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருது..
அதுமட்டுமில்லாமல், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்திலிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். கடுமையான நிதிச்சுமைக்கிடையிலும், அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியாதாரர்களுக்கு 1.7.2022 முதல், அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து, 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் படிக்க:Tamil Nadu DA allowances 2022 : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு!!