எஸ்பிகே குழுமத்தில் நடந்துவரும் வருமான வரித் துறை சோதனை தொடர்பாக, சென்னை அண்ணா மேம்பாலத்தின் அடியிலிருந்து கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகள் 4 கோடி  கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிகே குழுமத்தில்  30க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.   நேற்றைய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 180 கோடி ரொக்கப்பணமும், 150 கிலோ தங்கமும் சிக்கியதாக தகவல்.   மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தையும், பெட்டி பெட்டியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.  ’ஆபரேஷன் பார்க்கிங் மனி’ என்ற பெயரில் கார்களில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப்பணத்தை கைப்பற்றி வருகின்றனர். 

இன்று  நான்காவது நாளாக, வருமான வரித் துறை அதிகாரிகள் எஸ்பிகே குழுமத்தில் தங்களது சோதனையைத் தொடந்து வருகின்றனர். வருமான வரித் துறைச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைப் பரிசோதிக்க, அருப்புக்கோட்டையில் ஐடிக்காக தற்காலிக அலுவலகமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூட்டை மூட்டையாக  கோடி கணக்கில் பணம்  முதலீடு தொடர்பான இந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் அதிகாரிகள்.

இதனையடுத்து, இன்று சென்னை அண்ணா மேம்பாலத்தின் அடியிலுள்ள பராமரிப்பு அறையொன்றில் வருமான வரித் துறையினர் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாகனத்தை நிறுத்தும் அளவுக்கு இடமுள்ள இந்த அறையில், சாலை பராமரிப்புப் பணியை மேற்கொள்வதற்கான பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த அறையில் இருந்து , வருமான வரித் துறையினரால்  கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுகளை  ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.