அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். தலைமை செயலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையின் முடிவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் செய்ய பரிந்துரைத்தனர். அதனடிப்படையில், நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜியின் இதயத்துக்குச் செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுவதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து சென்னை, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்களும் ஆய்வு செய்துள்ளனர். இந்த பரிசோதனையும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், ஆஞ்சியோகிராம் பரிசோதனை முடிவுகளும், இஎஸ்ஐ மருத்துவர்களின் அறிக்கையும் எய்ம்ஸ் மருத்துவக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்றே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது மனைவி மேகலா மருத்துவமனையில் சந்தித்ததாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், எப்போது, எங்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜியை சந்திக்க, வழக்கறிஞரை கூட அனுமதிக்கவில்லை என திமுக சார்பில் முறையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
