விழுப்புரம் திமுகவில் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இடையே மோதல் நீடித்து வருகிறது. அண்மையில் வீடுர் அணை நீர் திறப்பு விழாவில் கொடி கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை மீண்டும் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

திமுக உட்கட்சி மோதல் : திமுகவில் பல்வேறு மாவட்டங்களில் நீயா.?நானா.? என போட்டியானது தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த அளவிற்கு ஒரே மாவட்டத்தில் இரு நிர்வாகிளுக்குள் தலைமை பதவியை பிடிக்க போட்டியானது நடைபெறும். அந்த வகையில் பல மாவட்டங்களில் போட்டிகள் நடைபெற்றாலும் விழுப்புரம் மாவட்டத்தில் வெட்ட வெளிச்சமாகவே போட்டியானது தெரிகிறது. பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற இப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியின் மேடையில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். 

அமைச்சர் பதவி பறிப்பு

இதனால் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மாவட்ட செயலாளர் பதவியில் நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தான், அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கி அடிக்கப்பட்டார். இது மட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளாராக பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மாவட்ட பொறுப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய அணையாக இருப்பது வீடுர் அணையாகும், இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இதில் திமுக அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, நிகழ்ச்சியில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அமைச்சர் பொன்முடி காரில் ஏறும் சமயத்தில் அங்கு வந்த திமுக நிர்வாகி மலர் மன்னன், திமுக கொடி கட்டக்கூடாது என செஞ்சி மஸ்தான் தடுப்பதாக கூச்சலிட்டு புகார் தெரிவித்தார். 

திமுக கொடிகட்ட எதிர்ப்பு

இதே போல அங்கிருந்த மற்ற நிர்வாகிகளும் பொன்முடியை வரவேற்று கொடி கட்டக்கூடாது என தடுத்ததாக தெரிவித்தனர். முன்னதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணை நீர் திறப்பு விழாவிற்கு தனக்கு உரிய அழைப்பு இல்லையெனவும் புகார் தெரிவித்திருந்தார். விழுப்புரத்தில் இரு முக்கிய தலைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.