ஜிஎஸ்டி மசோதாவை கண்டித்து ஓட்டல்கள், மருந்து கடைகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓடம் ஒரு நாள் கப்பலில் ஏறும். கப்பலும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்ற பழமொழியைபோல், கையேந்தி பவன்களை பார்த்து, சிரித்த ஐடி கம்பெனி ஊழியர்கள், கையேந்தி பவன்களுக்கு படையெடுத்துள்ளனர்.

வழக்கமாக அம்மா உணவகங்களில் தொழிலாளிகள், ஆட்டோ டிரைவர்கள் என பலர் செல்வார்கள். கடைசி நேரத்தில் சுமார் 2 மணிக்கு சாம்பார் சாதம் மட்டும் கிடைக்கும். ஆனால் இன்று, மதியம் 12.30 மணிக்கே அனைத்து உணவுகளும் காலியாகிவிட்டது.

குறிப்பாக அடையாறு, ராயப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய பகுதிகளில் அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்வோர் மதிய சாப்பாட்டுக்கு பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

பாரிமுனை கொத்தவால்சாவடி, பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ளவர்களுக்கு அதே பகுதியில் உள்ள சிறிய ஓட்டல்கள் மட்டுமே பயன்படுகிறது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களில் இருந்து, இந்த பகுதியிலேயே தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு தினமும் 3 வேளை சாப்பிடுவதற்கு இங்குள்ள உணவகங்களையே நம்பியுள்ளனர். ஆனால், அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி மசோதாவால், அனைத்து உணவகங்கள், ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அவசர தேவைக்கு முதலுதவி சிகிச்சைக்கு மருந்து வாங்குவதற்கு கூட முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

குறிப்பாக சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாமல், மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.