NIA : கோவையில் 2 பயிற்சி மருத்துவர்களிடம் NIA திடீர் விசாரணை.!! மருத்துவமனையிலும் ஆய்வு- காரணம் என்ன.?
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம்
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகளோடு தொடர்பில் இருப்பவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநில NIA அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் சென்னையிலிருந்து வந்த NIA அதிகாரிகள் கோவை போலீசார் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையில் என்ஐஏ திடீர் விசாரணை
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இன்று காலை பயிற்சி மருத்துவர்கள் தங்கியுள்ள இல்லங்களுக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி சோதனைக்கு பின்னர் கிளம்பினர். தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்ற சம்பவம் பரபர்பை ஏற்படுத்தியுள்ளது.