விழுப்புரம்,

5451 காலிப் பணியிடங்களை நிரப்ப, நாளை நடைபெற இருக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வில், விழுப்புரத்தில் மட்டும் 72 ஆயிரத்து 943 பேர் எழுதவுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், வரி தண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கான 5451 பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்–4 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வை 13 தாலுகாக்களில் உள்ள 186 தேர்வு மையங்களில் மொத்தம் 72,943 பேர் எழுத இருக்கின்றனர்.

இந்த தேர்வையொட்டி முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வு மைய முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அரசுப் பணியாளர் தேர்வாணைய துணை செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, விழுப்புரம் தாசில்தார் வெற்றிவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சண்முகம், பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணைய துணை செயலாளர் சிவசுப்பிரமணியன் பேசுகையில், “தேர்வு மையங்களுக்கு வரும் தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை உள்ளே கொண்டுச் செல்ல அனுமதிக்கக்கூடாது. அதை சோதனை செய்த பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும். தேர்வு தொடங்கும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு மையத்தை விட்டு முதன்மை அறை கண்காணிப்பாளர்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே வரக்கூடாது.

தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.