Immediate action if selling non-standard food items - Food Security Alert ...
திருவண்ணாமலை
நுகர்வோருக்கு தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், சிலர் பழக்கடையில் பழங்களை வீட்டிற்கு வாங்கி சென்று சாப்பிட்ட்டு வருகின்றனர்.
எனவே, பழங்கள் மற்றும் பழச்சாறு விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் பல்வேறு அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்து உள்ளார்.
அதன்படி, அவர், "பழச்சாறு தயாரிக்கும் இடமும் விற்பனை செய்யும் இடமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாதவாறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். குளிர் நிலை பெட்டியை வாரத்திற்கு ஒருமுறை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பழங்கள், பால், சர்க்கரை போன்றவை தரமானதாக இருக்க வேண்டும். பழச்சாறு தயாரிக்க உபயோகப்படுத்தும் தண்ணீர் பாதுகாப்பான குடிநீராக இருக்க வேண்டும். பழங்களை கழுவியபின் சாறு தயாரிக்க உபயோகிக்க வேண்டும்.
பழங்கள், பாத்திரங்கள், மிக்சி, டம்ளர் போன்றவை கழுவ பாதுகாப்பான தண்ணீர் உபயோகிக்க வேண்டும். பழச்சாறு தயாரிக்க துருப்பிடிக்காத பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
பழச்சாறு, சர்க்கரை, தண்ணீர் போன்ற உணவு பொருட்கள் எப்போதும் மூடிய நிலையில் உள்ள கலன்களில் வைத்து இருக்க வேண்டும். பணியாளர்கள் தூய்மையான உடை, தொப்பி, கையுறை போன்றவை அணிந்திருக்க வேண்டும்.
பணியாளர்கள் சோப்பு போட்டு அவ்வப்போது கைக்கழுவி கையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பழச்சாறு தயாரிப்பவர் கழிவுகளை போட மூடியுடன் கூடிய குப்பைத்தொட்டி வைத்து உபயோகிக்க வேண்டும்.
அதேபோன்று நுகர்வோருக்கு கழிவுகளை போட மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். அழுகிய பழங்கள், உபயோகிக்கும் தேதி முடிவுற்ற பால், காலாவதியான ‘எஸ்சென்ஸ்’ சுவைக்கூட்டி போன்றவைகளை கொண்டு பழச்சாறு தயார் செய்யக் கூடாது.
பழச்சாறு தயாரிக்க தரம் அல்லாத ஐஸ் உபயோகிக்க கூடாது. சுகாதாரக் கேடு விளைவிக்கும் ஈயம் பூசப்படாத பாத்திரங்களை சாறு தயாரிக்க உபயோகிக்கக் கூடாது. பழச்சாறை தரம் இல்லாத பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்களில் பரிமாறுவதோ அல்லது பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து கொடுப்பதோ கூடாது.
குப்பைகள், சாக்கடை, கழிப்பிடம் போன்ற சுகாதாரக் கேடான பகுதிகளின் அருகில் உணவு பொருள் தயாரிக்கவும், விற்கவும் கூடாது.
நுகர்வோருக்கு தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
