சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை எதிரே கள்ளச்சாராயம் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். திமுக பிரமுகர் உட்பட இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து கே.சி. பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள வளையமாதேவி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்கும் முன் நேற்று காலை 9 மணிக்கு அதன் எதிரே உள்ள இடத்தில் சாராயம் விற்பனை படுஜோராக நடந்துள்ளது. இதை இருவர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் உள்ள கடையில் இருந்தவர்கள் போலீசாருக்கு 'மாமூல்' கொடுத்து தான் கடை நடத்துகிறோம். உங்களுக்கு தேவையானதை கொடுக்கிறோம் என்று கூறுகின்றனர். இதனையடுத்து விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல் (50), சுரேஷ் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கல்லாநத்தம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல் (45) திமுகவை சேர்ந்த ரவி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நூற்றுக்கணக்கான கள்ளச்சாராய மரணங்களை பார்த்த பிறகும் இந்த அரசு எந்த பாடமும் படிப்பினையும் கற்றுக்கொள்ளவில்லை என கே.சி.பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பஞ்சாயத்து, கடை எண் 7142-ல் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. கேள்விகேட்டால் "நாங்க என்ன சும்மாவா கள்ளச்சாராயம் விக்குறோம் போலீசுக்கு பணம் கட்டி தான ஒட்டுறோம்" என்று சாதாரணமாக கூறுகிறார்கள்.
திமுகவினரால், அதிகாரிகளின் துணையோடு அமோகமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதை பார்த்தால் திருடன் கையில் சாவியை கொடுத்தது போல் உள்ளது. மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நூற்றுக்கணக்கான கள்ளச்சாராய மரணங்களை பார்த்த பிறகும் இந்த அரசு எந்த பாடமும் படிப்பினையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
