Asianet News TamilAsianet News Tamil

குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்; தொற்று நோய்கள் பரவும் அபாயத்தால் மக்கள் பீதி…

Illegal waste disposal in the residential area People panicked by the spread of infectious diseases ...
Illegal waste disposal in the residential area People panicked by the spread of infectious diseases ...
Author
First Published Sep 11, 2017, 8:05 AM IST


தேனி

தேனியில் குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக தனியார் மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் அரசு மருத்துவமனை மற்றும் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

இங்கிருக்கும் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், காயங்களுக்கு கட்டப்படும் துணிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் பொது இடங்களில் கொட்டக் கூடாது என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்காக நடத்தப்படும் நிறுவனத்தில்தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, மருத்துவக் கழிவுகளை அழிக்கும் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவக் கழிவுகளை பாதுகாப்போடு எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால் ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாக குடியிருப்புப் பகுதிகளில் திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர்.

வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பையுடன் மருத்துவக் கழிவுகளும் குவிந்துக் கொண்டே வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியது:

“சில தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களின் இதுபோன்ற செயலால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், மழைக் காலங்களில் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும்.

இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் பயன்படுத்தப்பட்ட ஊசியின் பாதிப்புகள் குறித்து அறியாத சிறுவர்கள் அதனை எடுத்து விளையாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, ஆண்டிப்பட்டி நகரில் திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios