- Home
- Tamil Nadu News
- பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
பொங்கலுக்கு 6 நாட்கள் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த தேதியில் எத்தனை பேருந்துகள்? முழு விவரம்!
தமிழக அரசு போக்குவரத்துகழகம் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் எத்தனை பேருந்துகள் இயக்கம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டும் மக்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகள்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட மற்ற இடங்களுக்கு ஜனவரி 9ம் தேதி 1,050 பேருந்துகளும், ஜனவரி 10ல் 1,030 பேருந்துகளும், ஜனவரி 11ல் 225 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் ஜனவரி 12ல் 2,200 பேருந்துகளும், ஜனவரி 13ல் 2,790 பேருந்துகளும், ஜனவரி 14ல் 2,920 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 10.,425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எப்படி முன்பதிவு செய்வது?
வழக்கமாக இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 21,535 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 6,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் www.tnstc.in என்ற அரசு போக்குவரத்துக்கழக இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். மேலும் 94440 18898 என்ற வாட்ஸ் அப் அண் மூலமும் முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

